இந்த தகவல் துண்டுப்பிரசுரம் தாய்மார்களுக்கு பிரசவத்தின் அறிகுறிகள் மற்றும் அவர்கள் பிரவச வலி ஏற்பட்டவுடன் செய்ய வேண்டியவை தொடர்பாக அறிவுறுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளது.

பிரசவ வலியின் ஆரம்பம்

பிரசவத்தின் ஆரம்பத்தில் உங்கள் கருப்பை சுருங்கி விரிய ஆரம்பிக்கும். உங்கள் கருப்பை சுருங்கும் போது வலி அதிகரித்து பின்னர் தளர்வடையும் போது வலி குறைவடைவதை நீங்கள் உணர்வீர்கள். இவ்வாறு ஒவ்வொரு வலியுடன் கூடிய கருப்பை சுருக்கங்கள்(contractions) சீரான இடைவெளியில் 30 செக்கன்களுக்கு அதிகமாக நீடிக்குமாயின் உங்களின் பிரசவம் ஆரம்பித்துள்ளது என கூறலாம். இந்த வலியானது நீண்டதாகவும் கடுமையாகவும் அடிக்கடியும் ஏற்படும். இவ்வாறு வலியுடன் கூடிய கருப்பை சுருக்கம் ஏற்படும் போது உங்கள் குழந்தை கீழ் நோக்கி தள்ளபடுவதுடன் கருப்பை கழுத்தும் திறக்கப்படும். இதன்பொழுது சிலவேளைகளில் இயோனி வழி இரத்தக்கசிவு ஏற்படுவதுடன் water bag எனப்படும் பனிக்குடம் உடைந்து திரவக்கசிவு ஏற்படலாம்.

பிரசவத்தின் ஆரம்ப கட்டம் எவ்வாறு இருக்கும்?

பிரசவத்தின் ஆரம்ப கட்டம் என்பது கருப்பை சுருக்கங்கள் தொடங்கியதிலிருந்து உண்மையான குழந்தை பேற்றின் வலி ஆரம்பமாகும் வரையிலான காலமாகும். இந்த காலகட்டத்தில் உங்கள் உடல் குழந்தையை பிரசவிப்பதற்கு தயாராகும்..

பிரசவ ஆரம்ப கட்டத்தின் அனுபவம், வேதனை மற்றும் குணங்குறிகள் தாய்மார்களுக்கிடையில் பரவலாக வேறுபடுகிறது.

இருப்பினும், பொதுவாக தாய்மார்களின் கருப்பை கழுத்து 4 செ.மீ வரை திறக்கும் வரையிலான கருப்பை சுருக்கங்களால் ஏற்படும் வலியானது சீரற்றதாக  இருக்கும்.

பிரசவத்தின் ஆரம்ப கட்டத்தில், கருப்பை கழுத்தில் தேவையான மாற்றங்கள் ஏற்படும். 

நேரம் செல்ல செல்ல, கருப்பை சுருங்கி தளர்வதால் கர்ப்பப்பை வாயில் மாற்றங்கள் ஏற்பட்டு அது மென்மையாகவும், மெல்லியதாகவும், இழுபடக்கூடியதாகவும் மாறி பின்னர் திறக்கத் தொடங்குகிறது.

பிரசவத்தின் ஆரம்ப கட்டத்தில் நான் எதிர்பார்க்க வேண்டியவை?

நீங்கள் கடுமையான வலியுடன் கூடிய கருப்பை சுருக்கங்களை உணராலாம் அல்லது சிலவேளைகளில் பிரசவத்தின் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் வலி மிகவும் லேசானதாக, உண்மையான பிரசவம் விரைவில் நடக்கும் என்று நம்ப முடியாத வகையில் ஏற்படும். இன்னும் சில பொழுதுகளில் பிரசவத்தின் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் வலியால் மன உளைச்சலுக்கு ஆளாகி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதோடு வழக்கமான வலி நிவாரணி மருந்துகள் அக்கட்டத்தில் தேவைப்படலாம்.

இந்த கருப்பை சுருங்கி விரியும் தன்மை ஒவ்வொருவருக்கிடையே பெரிதும் மாறுபடலாம்.

நீங்கள் அனுபவிக்கும் வலி பிரசவ வலியா என்பதில் சந்தேகம் இருந்தால் தயவுசெய்து உங்கள் மருத்துவச்சி அல்லது மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள்.

 சில வேளைகளில் சில மணிநேரங்களுக்கு சீரான கருப்பை சுருக்கங்கள் இருந்து  பின்னர் அவை முற்றிலும் மங்கிவிடலாம். இது முற்றிலும் இயல்பானது மற்றும் இது உங்களை பிரசவத்திற்காக படிப்படியாக தயார்படுத்தும ஒரு வழி முறையாகும். இவ்வாறான சிரமம் உங்களுக்கு ஏற்படும் போது சாய்ந்து படுத்துக் கொண்டு தூங்க முயற்சி செய்யுங்கள். வலிக்கு நீங்கள் இரண்டு பாராசிட்டமால்(Paracetamol)எடுத்துக் கொள்ளலாம்.

‘ஷோ’ என்று அழைக்கப்படும் கருப்பை கழுத்திலிருந்து வெளிவரக்கூடிய இரத்தம் கலந்த சீதம் உங்கள் பெண்ணுறுப்பிலிருந்து வெளியேறலாம். இந்த இரத்த போக்கு ஓரிரண்டு தேக்கரண்டியை விட அதிகமாக இருந்தாலோ அல்லது அந்த அளவைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டாலோ, தயவுசெய்து மருத்துவமனைக்கு செல்லுங்கள்.

சில வேளைகளில் உங்கள் பனிக்குடம் உடைந்து திரவக்கசிவு ஏற்படலாம் இது திடீரென ஏற்பட்டு அதிகளவான போக்காகவோ அல்லது குறைவாகவும் தொடர்ச்சியாகவும் ஏற்படக்கூடிய போக்காகவும் இருக்கலாம்.. இது நடந்தால், தயவுசெய்து அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.

குழந்தை மேலும் கீழ் இறங்குவதால் இடுப்பு பகுதியில் அழுத்தம் அதிகரித்திருப்பதை நீங்கள் உணரலாம்.

இயோனி வழியூடாக ஏற்படும் திரவக்கசிவு அதிகரிப்பதையும் நீங்கள் உணரலாம். இந்த குணங்குறிகள் உங்களுக்கு பீதியை ஏற்படுத்துமாயின் மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.

பிரசவத்தின் ஆரம்ப கட்டம் எவ்வளவு காலம் நீடிக்கும்?

இந்த கட்டத்தின் நீளம் ஆறு மணித்தியாலம் முதல் இரண்டு மூன்று நாட்கள் வரை இருக்கலாம். ஒவ்வொரு பெண்களுக்கிடையில் இவ்வளவு பெரிய வேறுபாடுகள் ஏன் உள்ளன என்பதை யாராலும் சரியாக சொல்ல முடியாது. இது சிலருக்கு முதல் கர்ப்பத்தின் போது நீண்டதாகவும் மற்றும் சோர்வு மிக்கதாகவும் இருக்கலாம்.

சில நேரங்களில் நீங்கள் 24 மணி நேரத்திற்கு மேலாகவும் இந்த ஆரம்ப கட்டத்திலேயே குழந்தையை பிரசவிக்காமல் இருக்கலாம்.

பிரசவத்தின் ஆரம்ப கட்டத்தில் எப்படியான நடவடிக்கைகள் உங்களுக்கு உதவக்கூடும்?

ஒரு சூடான குளியலுடன் ஓய்வெடுக்க முயற்சிக்கவும்

உங்கள் மனதை திசை திருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம். இடைக்கிடை கொஞ்சம் நடப்பது உதவி செய்யக்கூடும். உங்கள் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் நீங்கள் ஆராதனைகளில் ஈடுபடலாம். இது உங்கள் மனதிடத்தை அதிகரிக்கும் !!

கருப்பை சுருக்கங்கள் ஏற்படும் போது சுவாச பயிற்சியில்  கவனம் செலுத்துங்கள். ஒரு வலியுடன் கூடிய கருப்பை சுருக்கத்தை நீங்கள் உணர்ந்தவுடன், நீங்கள் பெருமூச்சு விடுவதைப் போல மெதுவாக சுவாசத்தை வெளிவிடுங்கள். வலி கடுமையாகும் போது, ​​முடிந்தவரை உங்கள் ‘வெளி மூச்சை நீடிப்பதன் மூலம் வலியை நீக்க முயலுங்கள். நீங்கள் வெளி மூச்சினை விடும் போது, ​முடிந்தவரை உடலை தளர்வாக்க முயலுங்கள்.

சிறு வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்துவதில் எந்தத் தீங்கும் இல்லை. தைலம் பூசுவது மற்றும் மசாஜ் செய்வது உதவக்கூடும்.

பிரசவத்தை எதிர்கொள்வதற்காக உங்கள் உடலுக்கு தேவையான சக்தியை உறுதி செய்வதற்காக நீங்கள் உங்கள் ஆகாரத்தில் கவனமெடுங்கள்.  மற்றும் நன்கு நீர் ஆகாரமும் பருகுங்கள்.

தாராளமாக திரவங்களை குடிப்பதுடன் அடிக்கடி சிறுநீர் கழிப்பதையும்  உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

கட்டிலில் ஓய்வெடுப்பதை விட நிமிர்ந்து நேராக இருப்பதும் உடலை அசைத்து நடப்பதும் சிறந்ததாகும்

உங்கள் பயணப்பைகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.

பிரசவ வலி அதிகரிப்பதுடன் தொடர்ச்சியாக வலி ஏற்படும் போதும்  மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.

நான் எவ்வாறான நிலைமைகளில், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.  

உங்களுக்கு திரவக்கசிவு ஏற்பட்டு பனிக்குடம் உடைந்துவிட்டதாக உணரும் போது

உங்கள் குழந்தையின் அசைவுகள் கணிசமாகக் குறைந்துவிட்டதாக நீங்கள் உணரும் போது . 

உங்களுக்கு இரத்தபோக்கு ஏற்படும் போது

பிரசவ வலி அதிகரிக்கும் போது . 

ஏதேனும்  நோய்களின் கடந்தகால வரலாறு உங்களிடம் இருந்தால் (வலிப்பு , இதய நோய் அல்லது நீரிழிவு நோய்). 

உங்களுக்கு கடந்த காலத்தில் விரைவான பிரசவம் நிகழ்ந்திருந்தால். 

உங்களுக்கு பிரசவ வலி குறை மாதத்தில் ஏற்பட்டால்

பிரசவ வலி இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாகவும் இரத்தப்போக்குடனும் ஏற்படும் போது 

நீங்கள் மருத்துவமனைக்கு வந்தவுடன் என்ன நிகழும்?

 ஒரு மருத்துவர் உங்கள் நிலையை சோதிப்பார் . 

அறிகுறிகளைப் பொறுத்து மருத்துவர்கள் கருப்பை கழுத்தின் நிலையை சரிபார்க்க யோனி பரிசோதனை செய்வார்கள். 

ஒரு  தாதி அல்லது மருத்துவச்சி உங்கள் குழந்தையின் இதயத் துடிப்பை அவதானிப்பார். தேவைப்பட்டால் குழந்தையின் இதய துடிப்பை கண்காணிக்கும் (C.T.G) செய்யப்படும். 

உங்களுக்கு வலி இருந்தால், உங்களுக்கு வலி நிவாரணி  வழங்கப்படும். 

நீங்கள் முடியுமான வரை நடக்க உங்களை ஊக்குவிப்பார்கள்.

உங்களுக்கு பிரசவ வலி போதுமான வரை ஏற்பட்டு கருப்பை கழுத்து போதுமான அளவு திறந்ததும், நீங்கள் பிரசவ வார்டுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *